இதை விட ரஜினி ரசிகர்களுக்கு சிறந்த தீனி இருக்கமுடியாது. இரண்டரை வருஷம் காத்திருந்ததற்கு மூன்று மணி நேரமும் உச்சகட்ட போதையில் திளைத்துகொண்டு ஒரு முழுமையான ஒரு ரஜினி படத்தை பார்க்கும் வாய்ப்பு இது. படையப்பாவிற்கு பின்னர் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு மேலாக ஒரு அக்மார்க் ரஜினி படத்திற்காக காய்ந்து போய் கிடந்தவர்களுக்கு சரவண பவன் அன்லிமிடட் மீல்ஸை வழங்கியிருக்கிறார்கள்.
குமுதமும் விகடனும் இரண்டாண்டுக்கு முன்னரே கண்டுபிடித்த அதே ஜெண்டில்மேன் ஷங்கரின் கதை. அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பும் ரஜினி மக்களுக்கு சேவை செய்ய பல்கலைக்கழகமும் (!!!), மருத்துவமனையும் தொடங்க நினைக்கிறார். இந்த சேவைகளையே தொழிலாக செய்யும் உள்ளூர் பவர் சென்டர் சுமன் ரஜினியை தடுத்து நிறுத்த பல வழிகளில் முயற்சி செய்கிறார். ரஜினி அனுமதிக்காகவும் கட்டிட செலவுக்காகவும் தனது சொத்து முழுவதையும் செலவழித்து வேலைகள் முடிவடையும் நேரத்தில் கோர்ட்டின் மூலம் கட்டிட அனுமதி செல்லாது என தீர்ப்பு வழங்கப்படுகிறது. சொத்துக்களை இழந்து வீதிக்கு வரும் ரஜினி, சுமன் தரும் ஒரு ரூபாயிலிருந்து …..
இரண்டாம் பாதியில் கருப்பு பண விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறார்கள். சிவாஜியின் special screeningஐ நிதி அமைச்சர் சிதம்பரம் பார்க்காமிலிருப்பது நல்லது. அவ்வளவு Amateur handling. இந்தியாவை வல்லரசாக்க கருப்பு பணத்தை ஒழிப்பதாலும், sales taxஐ கட்ட சொல்வதாலும், அடிப்படை சட்டத்தை தெரிந்துகொள்வதாலும், விஜயகாந்தை ஹீரோவாக போடுவதாலும்.. தமிழ் சினிமாவில் மட்டுமே முடியும். Cooooool…. ரஜினி படத்தில் இதெல்லாம் எதிர்பார்த்தா போறோம்னு சொன்னீங்கன்னா ஏவிஎம் ராஜேஸ்வரியில் ஆயிரம் நாளை கடப்பது நிச்சயம்.
ரஜினி ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதைவிட இரண்டு மூன்று மடங்காக வழங்கியிருக்கும் ஷங்கரை நிச்சயம் பாரட்டத்தான் வேண்டும். Frame by frame ஆக ரஜினிக்காக, ரசிகர்களுக்காக யோசித்திருக்கிறார். மேக்கப்பில் மட்டுமல்லாது, நடிப்பிலும், காட்சியமைப்பிலும் கூட பத்து இருபது வருடத்து முந்தைய ரஜினியை கொண்டு வந்திருக்கிறார்கள். ரஜினியின் மிகப்பெரிய ப்ளஸ் காமெடி, ஸ்டைல் கலந்து ஆக்ஷன். முதல் பாதியில் காமெடியில் வெளுத்துகட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் ஸ்டைல் சாம்ராஜ்யமே நடத்தியிருக்கிறார். ரஜினி ஏகப்பட்ட கெட்டப்புகளில் வருகிறார். உண்மையிலே தியேட்டரே அதிருது
. சந்திரமுகிக்கு பின்னர் கிடைத்த கேப்பில் ஏகப்பட்ட விஜய், சிம்பு படங்களை பார்த்திருக்கிறார். ரஜினி படங்களிலே பார்க்காத ஒரு வித அலப்பறை படம் நெடுக தெரிகிறது. (நானே சிவாஜி .. நானே …).
ஷ்ரேயாவுக்கு வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயினுக்கு என்ன வாய்ப்பு கிடைக்குமோ அதே வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். ரஜினி – ஷ்ரேயா ஜோடி அவ்வளவு கச்சிதம். இதற்கான credit ரஜினியின் மேக்கப்மேனுக்கா, ஷ்ரேயாவின் மேக்கப்மேனுக்கா என சாலமான் பாப்பையாவை வைத்தே பட்டிமன்றம் நடத்தலாம். வில்லனாக சுமன். சொத்தை வில்லன் வகையறா இல்லையென்றாலும், ரஜினியின் முன் எடுபடாமல் போகிறார். ரஜினி படங்களில் பாட்ஷா ரகுவரனும், படையப்பா ரம்யா கிருஷ்ணனும் மட்டுமே விதிவிலக்கு. விவேக் ரஜினியின் மாமாவாக அம்மாவின் தம்பியாக வருகிறார். ரஜினிக்கு பதிலாக எல்லா பஞ்ச் டயலாக்கையும் பேசுகிறார். (எ.கா: சிக்ஸுக்கு அப்புறம் செவண்டா, சிவாஜிக்கு அப்புறம் எவண்டா
)
4x resolutionல் எடுக்கப்பட்ட முதல் படம் என்கிறார்கள். ஆனால் சொத்தையான தியேட்டர்களால் ஒரு வித்தியாசமும் தெரிய மாட்டேன் என்கிறது. சுஜாதா வசனமாமே… வெகுஜன எழுத்தாளர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். சந்திரமுகிக்கு ஒரு ராரா என்றால் சிவாஜிக்கு ஒரு கூடை சன்லைட். இரண்டு முறை ரீப்பிட் பார்த்த பின்னரும் முக்கால்பேசி பேருக்கு மனசு ஆறவில்லை. பல்லேலக்காவை விட சன்லைட்டும், அதிரடிக்காரனும் கைதட்டல்களை அள்ளுகிறது. ரஹ்மானின் BGM – ப்ரிவியூ ஷோவில் எங்கே கேட்கவிடுகிறார்கள். சத்யமில் ஒரு மாதத்திற்கு பின்னர் அமைதியாக கேட்கவேண்டும்.
படம் முழுக்க பிரம்மாண்டம்… காட்சிக்கு காட்சி ஷங்கரின் உழைப்பு தெரிகிறது. பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் ரஜினியின் படங்களிலும் ஷங்கரின் படங்களிலும் நிச்சயம் மைல்கல். பல ஹிட் படங்களில் ஹிட்டான காட்சிகளை ஆங்காங்கே பொருத்தியிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்திய ஷங்கர் மறக்காமல் சாருநிவேதிதாக்களையும் பாமரன்களையும் திருப்திபடுத்தியிருக்கிறார். தீராநதிக்களும், காலச்சுவடுக்களும் கிழித்து தொங்கவிடுவதற்கு ஏகப்பட்ட வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார்.
காட்சிக்கு காட்சி அதிரடியாக்கி ரஜினி என்கிற மேஜிக்மேனை கொண்டு நிச்சயம் தியேட்டருக்கு வருபவர்களை mesmerism செய்யலாம் என்று நினைத்திருக்கிறார்கள். அந்த நினைப்பில் பெருவெற்றி பெற்றிருக்கிறார்கள். ஏ.வி.எம் சரவணன் நிம்மதியாக பெருமூச்சு விடலாம்
தொடர்புள்ள பதிவு: Sivaji Music review
