சில விழாக்களுக்கு போறதை விட போய்ட்டு வந்தேனு படம் போடுறதுதான் ரொம்ப சந்தோசமா இருக்கும். நேத்து கலந்துகிட்ட இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தின் 100 நாள் சந்தோஷ பகிர்வு விழாவும் இந்த ரெண்டாவது வகையை சேர்ந்ததுதான்.
விழா ஏதேனும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் தீபாவளி சமயத்தில் ஏதேனும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதனாலும், விழா குறித்த முழு விவரத்தையும் பதிவு செய்யுமளவு நமக்கு திறமை பத்தாது என்பதாலும் என் ஞாபகத்திலிருக்கும் சில விஷயங்களை மட்டும் எழுதுகிறேன்.
விழாவின் ஹைலைட்ஸ் இதோ ..
* எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதிய புலமைப்பித்தனை மீண்டும் இ.அ. 23ம் புலிகேசிக்கு பாடல் எழுத அழைத்து வந்திருக்கிறார்கள். இந்த விழாவின் வரவேற்புரையையும் நிகழ்த்த
அழைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் பாடல் எழுத தன்னை தேடி வந்தபோது ஏதோ அட்ரஸ் மாறி வந்துவிட்டதாக முதலில் நினைத்ததாக சொன்னவர், கடல் நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு தேவைப்படும் 1000 கோடிக்கு ரஜினியை பத்து படம் நடித்துத்தர கலைஞர் கேட்கலாம் என்று ஐடியா (!!!) கொடுத்தார்
* சத்யராஜ் வடிவேலின் நடிப்பில் எம்.ஜி.ஆரிலிருந்து சிவாஜி, பி.யூ.சின்னப்பா, கண்ணாம்பாள் வரை பலரின் தாக்கத்தை பார்த்தாக தெரிவித்தவர், மகாநடிகனுக்கு பின்னர் ரஜினியிடம் பேசும் சூழ்நிலையை முடிந்தளவுக்கு தவிர்த்ததாகவும், விவேக் பேசும்போது தன்னை அடுத்து
வரப்போகும் நடிகர்களை கூட கிண்டலடிக்கும் லொள்ளுப்பார்ட்டி என கூறியபோது ரஜினி தன்னை பார்த்து சிரித்தது, மகாநடிகன் படத்தில் தான் செய்த கிண்டலை அவர் மனதில் வைத்துக்கொள்ளவில்லை என்ற நம்பிக்கையை தந்ததாகவும் தெரிவித்தார்.
* ஷங்கரிடம் சில நாட்களுக்கு முன்னர் சிவாஜி உங்களுக்கு மற்றொரு படம்தான், ஆனால் இ.அ.23ம் புலிகேசி ஒரு முக்கிய வரலாற்றுப்படம் என தான் கூறியதாக மேடையில் தெரிவித்து ஷங்கரை கொஞ்சம் தர்மசங்கடத்திற்குள்ளாக்கினார் நாசர்.
* 550வது நாள் ஓடும் சந்திரமுகி நாயகனை வாழ்த்தி தன் பேச்சை தொடங்கிய பிரபு சில நாட்களுக்கு முன் தனது அண்ணன் (ராம்குமார்) உணர்ச்சிவசப்பட்டு தான் அரசியலுக்கு
வருவதாக சொன்னது உண்மையில்லை என்ற நல்ல செய்தியை சொன்னவர் அண்ணன் ரஜினி ஒருவேளை அரசியலுக்கு வந்திருந்தால் தானும் வந்திருப்பேன் என்று கூறி தன் செலவில் ரஜினிக்கு சூனியம் வைத்தார்.
* படம் நன்றாக ஓடியதும் பேசிய சம்பளத்தை விட அதிக பணத்தை ஷங்கர் கொடுத்ததாக தெரிவித்தார் மனோரமா
* நடிகர் ராஜேஷுக்கு எந்த நல்ல திரைப்படத்தை பார்த்தாலும் உடனே அது குறித்த விமர்சனமெழுதி பாராட்டும் வழக்கமுண்டாம். இ.அ 23ம் புலிகேசியையும் பாராட்டி விமர்சனமெழுதி சிம்புதேவனை தேடிப்பிடித்து பொன்னாடை அணிவித்தவரை நேற்று தேடிப்பிடித்து மேடையில் பேச வாய்ப்பளித்திருந்தனர்
* விஜய், மனிதர் சிரிப்பதற்க்கும் பேசுவதற்கும் கூட கால்ஷீட் ஒதுக்குவார் போலிருக்கிறது. மேடையில் ரஜினிக்கு அருகிலிருந்தவர் அதிகமாய் ரெண்டு வார்த்தை பேசியிருப்பார். ஐந்து தடவை சிரித்திருப்பார். விழாவிலும் அதிகமாய் விஜயை மற்ற நட்சத்திரங்கள் பேசும்போது கண்டுகொள்ளாதது ஆச்சரியமளித்தது.
* வழக்கமாய் படங்களிலிருப்பது போலவே மேடையிலும் ஹிரோயின்களான மௌனிகாவிற்கும், தேஜஸ்ரீக்கும் வேலையில்லை. அதிகமாய் யாரும் கண்டுகொள்ளவுமில்லை
* வடிவேலு, சிம்புதேவன் தன்னை கதாநாயகனாக வைத்து படமெடுக்க ஒரு கதையோடு வந்தபோது ஏதோ தன்னை பிடிக்காத யாரோ செய்த ஏற்பாடு என சந்தேகம் கொண்டதாக
நகைச்சுவையோடு துவங்கியவர் ராஜா வேஷம் போட தான் பட்ட கஷ்டங்களை தன் பாணியில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார். ஆனால் மனிதர் அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறார். பேசும்போதே திடீர் திடீரென்று அண்ணன் ரஜினிக்கும் அண்ணன் ஷங்கருக்கு நன்றி என்கிறவர், நேற்று மட்டும் ஐந்து தடவை ரஜினியின் காலில் விழுந்தெழுந்தார். குதிரைகள் பிரச்சனைக்காக படத்தை ஆரம்பத்தில் வெளிவராமல் தடுத்த Blue Cross மீது அதிகமாய் சாடியவர் படம் வெளிவர உதவிபுரிந்த கலைஞருக்கு நன்றி தெரிவித்தார்.
* பலத்த கைதட்டல்களுக்கும், விசில்களுக்கும் நடுவில் பேச வந்த ரஜினி, சிம்புதேவனை கல்வியாகவும், ஷங்கரை செல்வமாகவும், வடிவேலுவை வீரமாகவும் தற்குறிபேற்றினார்.
ஷங்கர் இ.அ. 23ம் புலிகேசி பட ரிலீசிற்காக வீட்டை அடமானம் வைத்ததாக குறிப்பிட்டவர். துண்டை அடமானம் வைத்து மீட்க முடியாவிட்டால் பரவாயில்லை, ஆனால் வேட்டியை?? கவனம் தேவை என அறிவுறுத்தினார். ஷங்கருக்குள் இருக்கும் ஒரு பதினாறு வயது சினிமா இளைஞனின் தேவைகளை தீர்ப்பதே ஷங்கரின் வெற்றிக்கு காரணம் என்றவர் ஷங்கரை பற்றி விரிவாக சிவாஜி பட வெற்றி விழாவில் பேசுவதாக தெரிவித்தார். வடிவேலு மட்டும் கொஞ்சம் கலராக இருந்தால் ரஜினி, கமலெல்லாம் அவருக்கு அப்புறம்தான் என ஏகத்துக்கு புகழ்ந்தார் (மேடைப்பேச்சு வரத்தொடங்கிவிட்டது?? )
இதுதான் நான் பார்த்த முதல் சினிமா சம்பந்தப்பட்ட விழா என்பதாலும், ரஜினியை ஒரு
முறையாவது நேரில் பார்க்கவேண்டும் என்ற வாழ்வின் மிகப்பெரிய லட்சியம் (!!!) நிறைவேறி விட்ட மகிழ்ச்சியிலும் கிடைத்த ஓசி Digi Camல் Click பண்ணித்தள்ளினேன். மற்றபடி இது போன்ற விழாக்களை டிவியில் எடிட்டிங் செய்து பார்ப்பதுதான் Better எனத்தோன்றியது. எந்தவித Preparationனும் இல்லாமல் மேடைக்கு வருகிறவர்கள் கோர்வையாக பேச இயலாமல் தடுமாறுகின்றனர். எதையோ பேசத்தொடங்குகிறவர்களின் நினைவில் ரஜினியும் ஷங்கரும் இருப்பது நினைவிற்கு வர உடனே அவர்களை புகழ்ந்து பேசத்தொடங்கி விடுகின்றனர். ஏதோ தலைவரை அவ்வளவு நேரம் புகழ்ந்ததால் பொறுமையாக இருக்கமுடிந்ததே ஒழிய வேறொருவர் விழா என்றால் அவ்வளவு நேரம் இருந்திருக்க முடியுமா எனத்தெரியவில்லை.
வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை சிறப்பாக படமாக்கியதற்க்காக இயக்குனர் சிம்புதேவனையும், இன்றைய சூழலில் இப்படியொரு படமெடுக்க துணிந்த ஷங்கரையும் அனைவரும் பாராட்டினர். அந்த பாராட்டுக்கள் (மட்டும் ) பொருத்தமாகவும் உண்மையாகவும் தோன்றியது.
Thanks a ton Gowtham for giving me such a nice opportunity.


