சில பதிவுகளுக்கு முன்னர் இணையத்தில் தேடுதல் குறித்து நான் எழுதிய Are Information Online Safe என்ற பதிவு தினமலரின் அறிவியல் ஆயிரம் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஒரு நாளில் மட்டும் 1200 தடவை என் பதிவு வாசிக்கப்பட்டிருக்கிறது. Link கொடுக்கப்பட்ட பதிவுக்கே இவ்வளவு விசிஸ்டர்ஸ்னா Link கொடுத்த பதிவுக்கு எவ்வளவு பேர் தினமும் வந்துட்டு போவாங்கனு ஆச்சரியமாயிருக்கிறது.   அதுவும் முதல் பக்கம், கடைசி செய்திகள், டீக்கடை பெஞ்சு, அக்கம் பக்கம், திரை மலர், …இதையெல்லாம் தாண்டி அறிவியல் ஆயிரம் பகுதிக்கு வந்தவர்கள் மட்டுமே என் பதிவு குறித்த செய்தியை கவனித்திருக்கும் வாய்ப்பிருக்கிறது.

இணையத்தில் தமிழுக்கு பலத்த வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. தமிழ் வலைப்பதிவுகளும், இணையக்குழுமங்களும் அதற்கு நல்ல உதாரணம். ஆனாலும் தமிழ் ஊடகங்களில் பல இன்னும் கடனுக்கேயென்றே ஏன் தங்கள் தளங்களை வைத்திருக்கின்றன என்பது புரியாத புதிர் . என் பார்வையில் வார இதழ்களில் விகடனின் தளம் வெகுவாக முன்னேறி இருக்கிறது. தினசரிகளில் தினமணி செய்திகளை செய்திகளை அடிக்கடி முழுமையாய் Update செய்கிறது. இதனைத்தவிர்த்து பல தளங்களின் நிலை மிக பரிதாபமாகவேயிருக்கிறது.  சமீபத்தில் தனது தளத்தை மேம்படுத்திய தினகரனில் செய்திகளை வாசிக்க என்ன font உபயோகப்படுத்தவேண்டும் எனத்தேடி தேடி அலுத்துப்போய் என் முயற்சியையே கைவிட்டுவிட்டேன். இ- பேப்பர் முறை விளம்பரங்களுக்கு நடுவில் செய்திகளை தேட வேண்டிய தமிழ் நாளிதழ்களில், இணையத்தில் படிக்கும் எண்ணத்தையே போக்கிவிடுகிறது. குங்குமம் வார இதழிலோ இன்னும் 90களின் இணையங்களை போல வார இதழின் பக்கங்களை Scanning செய்து Image ஆக போட்டிருக்கிறார்கள். புதிதாய் அறிமுகப்படுத்தியிருக்கும் வலைப்பதிவுகள் குறித்த பக்கத்தை தேடித் தேடி … ( கௌதம் ஜி கவனிக்க !!!)

தமிழ் மட்டுமல்லாமல் இந்தியாவில் மற்ற மொழிகளின் ஊடகங்களிலும் நிலைமையிலும் பெரிய மாற்றமில்லை. ஆங்கிலத்தை பொறுத்தளவில் CNN-IBN தனது தளத்தை சமீபகாலத்தில் சிறப்பான கவனம் செலுத்தி மேம்படுத்தியிருக்கிறார்கள். வலைப்பதிவுகளை போல வெளியிடப்படும் கட்டுரைகளில் கருத்துக்களை சொல்ல அனுமதித்தது, தொலைக்காட்சியின் வேகத்தில் இணையத்திலும் செய்திகள் செய்யப்படுவது, பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அல்லது என சிறப்பாய் செயல்ப்பட்டுவருகிறது. ஆங்கில தினசரிகளில் DNA INDIA நல்ல கவனத்தை செலுத்துகிறது. இணையமுறை செய்தி வழங்கும் முறைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்பட்டுவருகிறது. Times Of India பரவாயில்லை ரகம்.

தமிழ் ஊடகங்கள் இணையத்தில் இன்னும் ஈடுபாடு காட்டாமல் இருப்பதற்கு விளம்பர வருவாயின் வாய்ப்பு குறைவாக இருப்பதும் காரணமாயிருக்கலாம். இணையத்தில் தற்சமயம் கூகுளின் விளம்பரங்களின் மூலமே பெரும்பாலான தளங்கள் இயங்கிவருகின்றன. ஆனால் ஆங்கிலத்தை தவிர மற்ற மொழிகளின் தளங்களால் கூகுளின் விளம்பரத்தில் பெரிய அளவில் சம்பாதிக்கமுடியாது. தமிழ் அல்லது தமிழகம் சார்ந்த வணிக நிறுவனங்களிடம் இணைய வழி மார்க்கெட்டிங் குறித்த பெரிய விழிப்புணர்வு இல்லாததால் மற்ற விளம்பர வருவாய்க்கும் பெரிய வாய்ப்பில்லை. கட்டண முறைகளும் அயலகத்தில் வாழும் தமிழர்களிடம் அன்றி  இந்தியாவிலிருக்கும் தமிழர்களிடம் பெரிய வரவேற்பை பெறுவது மிகக்கடினம்.

தொடக்கத்தில் தமிழ் ஊடகங்கள் தங்களுக்கு இருக்கும் பலத்தை பயன்படுத்தி தங்கள் இணையத்தளங்களை சிறப்பாக மேம்படுத்துவதன் மூலமும், தங்கள் வியாபர நெருக்கத்தின் மூலமும் மிகப்பெரிய வணிக நிறுவனங்களுக்கு இணைய வழி மார்க்கெட்டிங்களை அறிமுகப்படுத்தலாம். அதே வேளையில் மேம்பட்ட தளத்தின் மூலம் தங்களுக்கு இன்னும் பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கலாம். கூகுளும் ஏற்கனவே தங்கள் முறையை மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. கூகுளும் கைகொடுக்கும் நேரத்தில் தமிழில் சிறப்பான  தளங்கள் உருவாகும் வாய்ப்பிருக்கிறது

(பி.கு: தமிழ் இணையத்தளங்களில் என்னென்ன செய்யலாம் என்ற என் கருத்துக்களை மற்றொரு சமயம் இன்னும் விரிவாய் எழுதுகிறேன். இந்தப்பதிவில் என் பார்வை குறித்த உங்கள் எண்ணங்களை அறிய ஆவலாயிருக்கிறேன்)

2 comments for “இணையத்தில் தமிழ் ஊடகங்கள்”

1

அன்பு தம்பி
இணையத்தில் தமிழ் ஊடகங்கள் குறித்த உனது வலைப்பதிவில் நல்லப் பல செய்திகளை எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான். பல இணைய பத்திரிகைகள் ஏனோ தோனொவென்று தான் இருக்கின்றன.

சமாச்சார் தமிழ் சுட்டியில் போய் பார்த்தால் தினபூமி இன்னும் ஜெயலலிதாவைத்தான் முதல்வராக செய்தி வெளியிடுகிறது. இன்னொரு முக்கிய விசயம். எல்லா பத்திரிகைகளூம் தங்களுக்கு விருப்பமான எழுத்துருவை பயன்படுத்துவதை உடனே நிறுத்தினால் நன்றாக இருக்கும்.

சிஃபி தமிழ் இதழே இன்னும் ஒருங்குறிக்கு மாறவில்லை. அதன் ஆசிரியர் அண்ணா கண்ணன் தனது வலைப்பதிவுகளில் ஒருங்குறி பயன்படுத்துகிறார்.

இபபடி இன்னும் நிறைய பத்திரிகைகள் மாறவேண்டும்.
நல்ல ஒரு பதிவு.

August 31st, 2006 at 4:24 pm
2

// எல்லா பத்திரிகைகளூம் தங்களுக்கு விருப்பமான எழுத்துருவை பயன்படுத்துவதை உடனே நிறுத்தினால் நன்றாக இருக்கும்.

முற்றிலும் உண்மை

இணையத்தில் மட்டும் வரும் தமிழ் செய்தி தளங்கள் குறித்து தனியாக எழுத நினைத்திருந்தேன். தமிழில் எனக்கு தெரிந்த வரையில் இணையப்பத்திரிக்கைகளின் தரமும் வடிவமைப்பும் சில வலைப்பதிவுகளை விட தாழ்ந்தே இருக்கிறது.

வருகைக்கு நன்றி

September 1st, 2006 at 1:33 am

Laeave a Reply