Mission Impossible -3 படம் பார்த்த பின் என் நண்பர்கள் குழுவில் இனி கேப்டனின் படங்களை கிண்டல் செய்யக்கூடாது என்று உறுதியெடுத்திருந்தோம். அந்த உறுதியை இன்று நான் மீற வேண்டியதாகிவிட்டது. கேப்டனின் அடுத்த படம் குறித்த செய்தியை படித்தவுடன் என்னால் உடனே பதிவிடாமல் இருக்க முடியவில்லை.
தேர்தல் சமயத்தில் கேப்டனுக்கு ஓட்டு போடச்சொல்லி ஒரு எஸ்.எம்.எஸ் தீயாய் பரவியிருந்தது. தேர்தலில் ஓட்டளிக்காவிட்டால் மீண்டும் நடிக்க வந்துவிடுவார் என்ற எச்சரிக்கையோடு வந்த எஸ்.எம்.எஸ் அது. ஆனால் விருதாச்சலத்தில் வெற்றி பெற்ற தான் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்கவிருப்பதாக அறிவித்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த அதிர்ச்சியின் தொடர்ச்சியாக இப்போது "திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி" புகழ் பேரரசுவின் இயக்கத்தில் கேப்டனின் அடுத்த படமான தர்மபுரி வரவிருக்கிறது . தர்மம் புரி என்பதில் ம் ஐ எடுத்துவிட்டு தர்மபுரி ஆனாதே தவிர இதற்கு வேறெந்த உள்குத்தும் இல்லை என்று சூடம் காட்டாமல் சத்தியம் செய்திருக்கிறார்கள். பஞ்ச் டயலாக்குகளுக்கு பெயர் பெற்ற பேரரசு இந்த படத்திலும் அள்ளிதெளித்திருக்கிறார் போலும்.
உதா: கண்டவன் கையை வைக்க நான் பேல் பூரி இல்ல.. தொட்டா சுடும் சோளா பூரி!
பேரரசுவின் வசனங்களும் காட்சியமைப்புகளையும் விடக்கொடுமை அவர் எழுதும் பாடல்கள் . இந்த படத்திலும் அவ்வகை பாடல்களுக்கு குறைவிருக்காது போலிருக்கிறது.
ரேஷன் கடையில வரிசையடா…ஏழைங்க ஆயுசை குறைக்குதடா…
ஆணவம் வாழ்ந்ததா தெரியலடா…
ஆண்டவன் கொடுத்தா அழிவே இல்லடா!
நாட்டில் என்னென்னதிற்கெலாமோ தடைவிதிக்க சொல்லி போராட்டம் நடத்துகிறார்கள். பேரரசு பாடல் எழுதுவதற்கு தடைவிதிக்க சொல்லி யாராவது பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தால் தேவலை.


