மிகவும் சொதப்பலான தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மேற்கிந்திய தீவுகளுடனான தொடர் அவ்வப்போது பல ஆச்சரியங்களை அளித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு நாள் தொடர்களில் தொடர்ச்சியாய் வெற்றி பெற்று வந்த இந்தியாவை 4 – 1 என்ற எண்ணிக்கையில் தோற்கடித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியாவின் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்தியதோடு, பந்துவீச்சையும் சிதறடித்து நல்ல முன்னிலை பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி. சரி டெஸ்டும் கோவிந்தா என்ற நினைத்திருந்த வேளையில் வாசிம் ஜாபர் ஆபாந்தவானனாக பொறுப்பாய் ஆடி 212 ரன்கள் எடுத்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த தொடரில் இதுவரை அவ்வளவாய் பிரகாசிக்காத தோனியும் நேற்று ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட அதிரடியாய் 69 ரன்கள் எடுத்து இந்தியா இரண்டாம் இன்னிங்சில் 521 ரன்கள் எடுத்ததோடு மேற்கு இந்திய தீவுகளுக்கு 392 என்ற இலக்கை நிர்ணயிக்க உதவியுள்ளார்.
இதற்கிடையே நேற்றைய ஆட்டத்தின் போது தோனியின் அவுட் குறித்த சர்ச்சையில் லாரா மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவே உணர்கிறேன். எளிதாய் வெல்ல வாய்ப்பிருந்த முதல் டெஸ்ட், ஜாபாரின் ஆட்டதினாலேயே கொஞ்சம் கை நழுவி போய்விட்டாலும் தோனியின் அந்த 52 பந்துகளில் 69 ரன்கள் லாராவை அதிகம் பாதித்திருக்க வேண்டும். முகமதுவின் பந்தை தோனி பவுண்டரி நோக்கி விரட்டிய போது கங்கா அதனை கேட்ச் செய்தார். ஆனால் அவர் எல்லைக்கோட்டை மிதித்தாரா இல்லையா என்பது நடுவரான ஆசாத்துக்கு சந்தேகம் வந்த சூழலில் மூன்றாவது அம்பயரை துணைக்கு அழைத்தார். டிவி ரீ பிளேவிலும் தெளிவாய் தெரியாத சூழலில் சந்தேகத்தை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக்கி அவுட் இல்லை என நடுவர் அறிவிக்க கேட்ச் செய்த பீல்டரின் வார்த்தைகளை நம்பும்படி லாரா நடுவரிடம் வாதிட்டார். அத்தோடு நில்லாது தோனியிடம் வெளியேறுமாறு வேண்டினார். குழப்பம் தொடர்ந்து நிலவிய சூழலில் உணர்ச்சி வசப்பட்ட லாரா நடுவரிடம் இருந்து பந்தை பறித்து தொடர்ந்து பந்து வீசுமாறு பந்துவீச்சாளரை அழைத்தார். இந்த சூழலில் டிராவிட் ஆட்டத்தை முடித்து கொள்வதாக அறிவிக்க தோனியும் பீல்டரின் வார்த்தையை ஏற்று தான் அவுட் என ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

பீல்டிங் செய்தவர் நிச்சயமாய் தான் எல்லைக்கோட்டை மிதித்தது குறித்து உறுதியாய் சொல்ல முடியாது. உறுதியாய் நம்பக்கூடிய டிவி ரீபிளேவும் தெளிவில்லாத நிலையில் கிரிக்கெட் விதிகளின்படி நிச்சயம் பேட்ஸ்மெனுக்கு சாதகமான தீர்ப்பு வழங்குவதே சரியானதும் கூட. இன்றைய கிரிக்கெட்டின் மிக மூத்த வீரர்களுள் ஒருவரான லாரா இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டது எனக்கு அதிக ஆச்சரியத்தையும் வருத்ததையுமே அளித்தது. அதே வேளையில் இந்திய வீரர்கள் சூழலை மிகவும் நேர்த்தியாய் சமாளித்தது பாராட்டிற்குரியது.
கடைசி நாளான இன்று பத்துவிக்கெட் கையிலுள்ள சூழலில் முதல் டெஸ்டை கைப்பற்ற மேற்கிந்திய தீவுகள் அணி இன்னும் 379 ரன்கள் எடுக்க வேண்டும். ஒரு நாளில் 379 ரன்கள் அல்லது பத்து விக்கெட் என்பது அனேகமாக இயலாத ஒன்று என்றாலும் இதே ஆடுகளத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது இன்னிங்சில் 418 ரன்களை எடுத்து சாதனை வெற்றி பெற்றிருக்கிறது . அதனால் கடைசி நாள் ஆட்டம் கடைசி பந்துவரை சுவாரசியமாய் இருக்க வாய்ப்பிருக்கிறது
கும்ளே அல்லது கெய்ல்/சர்வான் ஏதேனும் மாயஜாலங்களை நிகழ்த்தினால்…., ஒருவேளை ஆட்டம் பரபரப்பான முடிவை நோக்கி சென்று நேற்று லாரா உணர்ச்சிவசப்பட்ட, நாம் பெருந்தன்மையாய் விட்டுக்கொடுத்த அந்த ஆறு ரன்கள் முடிவை தீர்மானித்தால் .. , I'm really keeping my fingers crossed .. 


