1. “I’m back”, “நான் வந்துட்டேன்” என்று எத்தனை விதமாய் உதார் விட்டாலும் ஆசையாய் ஆரம்பித்த இந்த தமிழ் பிளாக் அம்போவென நிற்பது மனதிற்கு என்னவோ செய்கிறது. மோட்டர் விகடனின் புண்ணியத்தில் மாதத்திற்கு இரண்டு மூன்று கட்டுரைகள் தமிழில் எழுதினாலும் நிறைய எழுத வேண்டுமென நினைத்த விஷயங்கள் Draftலேயே கிடக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை கூட எழுதாமல் இருந்துவிட்டு “மம்மி நான் ரொம்ப பிஸி’ என்று அலட்டுவதை குறைத்து தொடர்ந்து எழுத வேண்டும்.
2.தமிழில் எழுதுவதுதான் குறைந்து விட்டதென்றால் தமிழில் படிப்பது (இணையத்தை தவிர) சுத்தமாய் குறைந்துவிட்டது. போன முறை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் அலமாரியை அலங்கரித்துகொண்டுதான் இருக்கிறது. அதிலும் இணையத்திற்கு அடிமையான பின்னர் ஏதோ அச்சிட்டு படிப்பது இயற்கைக்கு செய்யும் துரோகம் என்ற சமூக நல எண்ணம் வேறு லேசாய் எட்டிப்பார்க்கிறது. என்ன நடந்தாலும் சரி தூங்குவதற்கு முன்னால் அரை மணி நேரமாவது ஏதாவது ஒரு புத்தகம் படிப்பதென கங்கணம் கெட்டியிருக்கிறேன். இந்தப்பதிவை அடிக்கும் போதே மூன்றரை மணி ஆகிவிட்டதால் இன்றைக்கு மட்டும் எக்ஸ்க்யூஸ்
3. முடியாதென நினைக்கும், பிடிக்காத விஷயங்களை உடனேயே முகத்துக்கு நேராக சொன்னால் கோவக்காரன் என்கிறார்கள். எனக்கென்னவோ அதுதான் நேர்மையென தோன்றுகிறது. இது நேர்மையா அல்லது ஊரோடு ஒட்டி வாழாத குணமா என்னும் நீயா நானா விற்கு இன்னும் விடை கிடைக்காததால் கொஞ்ச நாளைக்கு கோவத்தை அடக்கலாம் என்று எண்ணம்
4. 2008 முழுவதும் நாலு ஊருக்கு சுற்றி அலைந்தால்தான் தமிழ்நாட்டு சட்டிக்குள்ளேயே இவ்வளவு நாள் குதிரை ஒட்டியது எவ்வளவு தப்பு என்று புரிகிறது. அதிலும் ஹிந்தி நஹி மாலும் ஹை கிற்கு கிடைக்கும் லுக் ரொம்ப அசிங்கமாய் இருக்கிறது. பக்கத்து ஸ்டேட் ஆந்திரைட்டும், கேரளைட்டும் ச்சும்மா பூந்து விளையாடும்போதும், ஹம் ஆப் ஹையின் கோன் பார்த்து வளர்ந்த தமிழ்நாட்டு பார்ட்டிகள் “கிவ் மீ தோ டிக்கெட் ஹை, தோ பிட்சா அவுர் தீன் கோக் ஹை “ என்று வர்மா விடும் போதும் ஏற்படும் வயிற்றெரிச்சலுக்கு நல்ல ஹிந்தி கற்றுத்தரும் ஜெலிசில் ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும்
5. காலை டிபன் சாப்பிடுவதில் ஏற்பட்ட சோம்பல் இப்போது மதியம் லஞ்சுக்கும் நீண்டு ஃபுல் கட்டு இரவு சாப்பாடு என்பதில் வந்து நிற்கிறது. Breakfast skip பண்ணுவதே உலக மகா தப்பு என்பதை பல இடங்களில் படித்தும், பலபேர் அட்வைசித்தும் பழக்கத்தை மாற்றாமல் மதிய சாப்பாட்டையும் விட்டு லேட்நைட்டில் ஃபுல் கட்டு கட்டுவதை குறைத்தே ஆகவேண்டும் அல்லது வேளாவேலைக்கு சமைத்து தர, ஒழுங்காக நேரத்துக்கு சாப்பிடஅன்புறுத்தும் ……………. ஒரு சமையல்காரரை தேடிப்பிடிக்க வேண்டும்
6. ஸ்கூல் , காலேஜில் படித்த நண்பர்கள், இரண்டு மணி நேரம் ப்ராஜக்டில் டிஸ்கசன் செய்தவர்கள் எல்லாம் மறக்காமல் புது வருஷத்திற்கு, பிறந்த நாளைக்கு, பொங்கலுக்கு, தீபாவளிக்கு, வெள்ளம் வந்ததற்கு என்று வாழ்த்து/ஆறுதல் தெரிவிக்கும் போது causal மனநிலையோடோ, இல்லை network congestion எல்லாம் முடிந்த பிறகு .. என்னும் சமூக நல்லெண்ணத்தோடோ இல்லாமல் ஜோதியில் ஐக்கியமாக பழகவேண்டும். நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
7,8. நல்ல பதிவைப்படித்தால் ஜிடாக்கில் அழைத்து “கலக்கல் போஸ்ட்” என்று சொல்லி விட்டு ஒரு பின்னூட்டத்தை குறைத்து வீண் பழிக்கு ஆளாகாமல் ஒழுங்காய் பதிவுக்கே சென்று மரியாதை செய்ய பழக வேண்டும். டிவிட்டரிலும் பதில் சொல்பவர்களிடம், தேவையோ இல்லையோ குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலியாவது போட்டு மரியாதை கொடுக்க பழகவேண்டும். டிவிட்டர் conversation tool இல்லை, பிளாக் .. இல்லை என்னும் Old school thoughts எல்லாவற்றையும் ஏறக்கட்டிவிட்டு நிஜமான social networkingகில் ஈடுபடவேண்டும்.
9. நடக்கவே நடக்காத உறுதிமொழிகள் கொடுப்பதை/எடுப்பதை நிறுத்தி தொலைக்க வேண்டும் .




